மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எமது அண்டை நாடான இந்தியாவில் உள்ள மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து இரு பிரிவினர் இடையே வன்முறை நடந்து கொண்டிருக்கிறது.
வன்முறையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பலனலிக்கவில்லை.
இடைவெளி விட்டு தொடர்ச்சியாக வன்முறை நடந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் குறிப்பிட்ட சமுதாய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானதால் வன்முறை மேலும் அதிகரித்தது. இந்த வன்முறையில் இது வரை 160-க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.
நேற்று இரவு மீண்டும் பிஷ்னுபூர் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் குவாக்டா பகுதியிலுள்ள மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கலவரத்தில் குக்கி இன மக்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தை தொடர்ந்து குக்கி இனமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் கமாண்டோ ஒருவரின் தலையில் குண்டு காயம் பட்டிருக்கிறது. புதிய கலவரத்தால் பிஷ்னுபூர் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இம்மாவட்டத்தின் வட்கா பகுதியில் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு இரு பிரிவினரும் வரக்கூடாத பகுதிகளாக துணை ராணுவப்படையினர் அறிவித்திருந்தனர்.
அந்த இடத்திற்குள் குக்கி இன மக்கள் வந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதே மாவட்டத்தி கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் பாதுகாப்பு படையினருக்கும் மைதேயி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயம் அடைந்தனர்.
மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் வந்து சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் எந்த பலனும் ஏற்படவில்லை.
மணிப்பூர் முதல்வரை மாற்றவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் பா.ஜ.க. அதற்கு மறுத்துவிட்டது.
மணிப்பூரில் 53 சதவிகிதம் அளவுக்கு மைதேயி இன மக்களும், 40 சதவீதம் அளவுக்கு குக்கி இன மக்களும் வசிக்கின்றனர். குக்கி இன மக்கள் பெரும்பாலும் வனப்பகுதியில் வசிக்கின்றனர். மைதேயி இன மக்கள் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.