ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் உயிர்ச் சேதமும், கட்டிட சேதங்களும் தொடர்கின்றன. ஆனாலும், பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருங்கடல் பகுதியின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரஷியாவின் மிகப்பெரிய துறைமுகம் நோவோரோசிஸ்க் (Novorossiysk). உக்ரைனின் உளவுத்துறையும், கடற்படையும் இணைந்து நடத்திய கடல் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் பெரிய கப்பலான ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் (Olenegorsky Gornyak) தாக்கப்பட்டது.
450 கிலோ டைனமைட் வெடிப்பொருளுடன் சென்ற உக்ரைனின் ஆளில்லா சிறுகப்பல்கள் (Sea Drone) தாக்கியதில், அந்த கப்பல் பலத்த சேதமடைந்திருப்பதாகவும், அது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இனி பயன்படாது எனவும் உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது. இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்த ரஷியா, துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை.
ரஷிய ஏற்றுமதிகளுக்கு நோவோரோசிஸ்க் துறைமுகம் ஒரு முக்கியமான இடம். 2-ம் உலகப் போரின்போது கட்டமைக்கப்பட்ட ‘லேண்டிங் ஷிப்’ எனப்படும் வகையை சேர்ந்த ஒலெனெகோர்ஸ்கி கப்பல், ராணுவ தளவாடங்களை நீர் மற்றும் நிலத்தில் இருந்து எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே இப்படி ஒரு தாக்குதலை உக்ரைன் இலக்காக வைத்திருப்பதாக தெரிகிறது.