ஐந்து இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து மீள ஆராயப்போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீக்கியுள்ளார். எனினும், கத்தோலிக்க திருச்சபை அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதனைக் கண்டித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் தடை நீக்கப்பட்டமை குறித்து அரசு மீள்பரிசீலனை செய்யுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தற்போதைக்கு இது குறித்து மீள்பரிசீலனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று குறிப்பிட்டார்.
புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புடன் தொடர்புபட்டவர்களும் இணைந்து தடைகளை நீக்கும் முடிவை எடுத்தனர் என்று தெரிவித்த அவர், “விமர்சனங்கள் உள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். எனினும், இதனைத் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தடையை நீக்கியுள்ளோம். அரசியல்வாதிகள் எவரும் இதில் தொடர்புபடவில்லை” – என்று குறிப்பிட்டார்.
இது குறித்து நாங்கள் மீள்பரிசீலனை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
எனினும், தடை நீக்கப்பட்ட அமைப்புக்களின் நடவடிக்கைகளை உரிய தரப்புக்கள் தொடர்ந்தும் கண்காணிக்கும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
“கண்காணிப்பு தொடரும். அவர்கள் பிழை செய்தால் தடை மீண்டும் நடைமுறைக்கு வரும்” – என்றும் அவர் மேலும் கூறினார்.