வரும் மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
‘என் மண்,என் மக்கள்’ எனும் பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார்.
இதில், திருமயம் பேருந்து நிலையம் அருகில் அவர் பேசியது: இந்ததொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டத் துறை அமைச்சராக உள்ள எஸ்.ரகுபதிக்கு ஊழல் தடுப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநில அரசு ரூ.5.50 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆன நிலையில் ரூ.7.53 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அப்படியானால், இங்குள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கள் மீதும் ரூ. 3.52 லட்சம் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல்.
அடுத்த மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடிதான் பிரதமராகப் போகிறார். அப்போது இங்கிருந்து பாஜக எம்.பி.க்கள் செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பாத யாத்திரை என்றார்.
லெணாவிலக்கு பகுதியிலுள்ள சிற்பக் கூடத்தைப் பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம், அதிமுகவுடனான கூட்டணி குறித்து தேசியத் தலைமைதான் முடிவெடுக்கும். மக்களவைத் தேர்தலில் நான்போட்டியிட போவதில்லை என்றார்.