சமூக சூழ்நிலைகளால் ஒரு முறை சிகரெட் புகைக்கச் செல்லும் இளைஞர்கள், சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களை புறந்தள்ளிவிடுகின்றனர். அதுவே ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் இருந்தால்.
பல நாடுகளில் புகையிலை, மது மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களின் மீது அது தொடர்பான எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கப்படுவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதே போன்று பல பொருள்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்நிலையில், சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நலத் தீங்கு குறித்த பல எச்சரிக்கை வாசகங்களை, ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒன்று என்ற வகையில் அச்சடிக்கும் கொள்கை ரீதியிலான முடிவை ஆகஸ்ட் 1-ம் திகதி முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது கனடா.
இதுதொடர்பாக கொள்கை ரீதியான முடிவை கனடா அரசு கடந்த ஆண்டு எடுத்தது. நடப்பு ஆண்டில் பிற்பகுதியில் இது செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட்டு விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இது பற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதை அடிமையாதல் துறைக்கான அமைச்சர் கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் கூறும்போது,
புகையிலை பொருள்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.
சமூக சூழ்நிலைகளால் ஒரு முறை சிகரெட் புகைக்கச் செல்லும் இளைஞர்கள், சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களை புறந்தள்ளிவிடுகின்றனர். அதுவே ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் இருந்தால், அது ஒரு மனத்தடையை, பயத்தை ஏற்படுத்தி அதை தவிர்க்கச் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் , ‘ஒவ்வொரு பஃப்பிலும் விஷம்’,
`சிகரெட் ஆண்மைக் குறைவை உண்டாக்கும்’,
`சிகரெட் புற்றுநோயை ஏற்படுத்தும்’
போன்ற பல வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளது.