இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட் டார்.
இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயம் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் வீட்டில் பலத்த பாதுகாப்பை மீறி அவர்கள் எப்படி சென்றனர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.