லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இனந்தெரியாத பெண்ணின் சடலம் இராணுவத்தின் உதவியுடன் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்தச் சடலத்தை மீட்கும் பணிக்கு மலை உச்சிக்குச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், சடலமாக மீட்கப்பட்ட பெண் மற்றும் இராணுவச் சிப்பாயின் சடலம் பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கல்கந்தை மலை உச்சி சரிவு பகுதியில் காணப்பட்டமை தொடர்பில் லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் (01) மாலை தகவல் கிடைத்தது.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தைக் கண்டுபிடித்ததாக லிந்துலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிசிர தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதிமன்றத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் சம்பவ இடத்துக்கு மரண விசாரணை செய்வதற்கான நேரம் போதாத நிலையில் நீதிவான் நேற்று (02) முற்பகல் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்தார்.
இவருடன் பொலிஸார், இராணுவத்தினர் எனப் பலர் சென்றிருந்தனர். அதன்பின் சடலம் மீட்க்கப்பட்டு சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையின் பின் சடலம் சட்ட பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப் பணிக்கப்பட்டது.
அத்துடன் மலை உச்சி பகுதிக்கு நடந்து சென்ற வேளையில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் அவர் வழியில் உயிரிழந்தார். இராணுவச் சிப்பாயின் சடலத்தையும், இராணுத்தால் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தையும் அரும்பாடுபட்டு சுமந்து கொண்டு மலையடிவாரத்தில் மீட்புப் பணியாளர்கள் வந்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.