Home World முக்கிய துறைமுகம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியம் நாசம்.

முக்கிய துறைமுகம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியம் நாசம்.

0

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

ரஷிய- உக்ரைன் போர் தற்போது 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது. இதனால் அத்துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்மாயில் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் அத்துறைமுகத்திற்கு உள்ளே வர இருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றது. “ஆப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் சைனா ஆகிய நாடுகளுக்காக தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் வர இருந்தன. இத்தாக்குதல்களால் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமாகியிருக்கிறது. டானுபே துறைமுகத்தின் கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்திருக்கிறது.

உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது” என்று இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் துணை பிரதமர் ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ் (Oleksandr Kubrakov) தெரிவித்தார். “உலகத்திற்கே சர்வ நாசத்தை விளைவிக்கும் ஒரு போரை ரஷியா நடத்தி வருகிறது. அவர்களின் இந்த வெறியாட்டத்தால் உலக உணவு சந்தை அழிந்துவிடும். அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். தானிய வினியோகம் பாதிக்கப்படுவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ரஷியா, “அந்த துறைமுகம் அயல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும், ராணுவ தளவடங்களுக்கும் புகலிடமாக திகழ்ந்தது” என கூறியிருக்கிறது. உயிர்ச்சேதம் எதுவும் இல்லையென்றாலும் அங்கிருந்து வெளிவரும் புகைப்படங்களில், உடைந்த கட்டிடங்களும், பெரும் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்களும் மற்றும் மிக பரவலாக சிதறிக்கிடக்கும் தானியங்களும் காணப்பட்டது. உலகளவில் தானியங்களுக்கு தட்டுப்பாடும், தானியங்களின் விலைகள் கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version