Home World US News டிரம்ப் மீது 4 பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள்: உறுதியானால் நீண்ட சிறைவாசம்.

டிரம்ப் மீது 4 பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள்: உறுதியானால் நீண்ட சிறைவாசம்.

0

குற்றச்சாட்டு உறுதியானால் தண்டனையாக நீண்ட சிறைவாசம் அனுபவிக்கக் கூடிய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு மத்திய நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. 2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டிரம்ப் இந்த வழக்கிற்காக வியாழனன்று வாஷிங்டனிலுள்ள மத்திய நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் என 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கிடைக்கவிருந்த வாக்குகளை தனதாக்கி கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு வார காலம் இந்த சதிக்கான திட்டம் தீட்டப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்புடன் சதி செய்ததாக பெயர் வெளியிடப்படாத 6 பேர்களும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகவில்லை. ஒருவேளை பின்னர் அவர்கள் பெயர்களும் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டிரம்ப், 2024 தேர்தல் பிரசாரத்திற்கு தான் செல்வதை தடுக்கும் விதமாக சிறப்பு வழக்கறிஞர் ஜேக் ஸ்மித் தீய எண்ணத்துடன் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

சமீபத்திய சமூக வலைதள பதிவில், “2016 தேர்தலில் நான் வென்றதை எதிர்த்து ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தியதைபோல், ஒரு தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என தெரிந்தால் அதனை எதிர்த்து போரிட எனக்கு முழு உரிமை உள்ளது” என டிரம்ப் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version