எமது அண்டை நாடான இந்தியாவில் உள்ள ஹரியானாவில் வி.எச்.பி., ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கலவரத்துக்கு காரணமான 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நுாஹ் மற்றும் சோனா மாவட்டங்களில் பதற்றம் தொடர்கிறது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நேற்று வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை.
இங்குள்ள குருகிராமில், வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது.
![](http://namthesam.tv/wp-content/uploads/2023/08/364759000_2416506088549653_8856173828710116956_n.jpg)
இது, அருகில் உள்ள நுாஹ் மாவட்டத்தை அடைந்தபோது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர் கும்பல் ஒன்று, ஊர்வலத்தின் மீது கல் வீசியது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
இருதரப்பும் மாறி மாறி கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் கார்களை, இளைஞர் கும்பல் தீயிட்டு கொளுத்தியது.
இதையடுத்து, அங்கு பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது கலவரத்தை தொடங்கிய கும்பல் துப்பாக்கியால் சுட்டதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரண்டு போலீசார் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்; 10 போலீஸ்காரர்கள் உட்பட 23 பேர் காயம் அடைந்தனர்.
இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பான தகவல் குருகிராமின் சோனா மாவட்டத்துக்கும் பரவியதை அடுத்து, அங்கும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில், 120 வாகனங்கள் சேதம் அடைந்தன. அவற்றில், 50 வாகனங்கள் போலீசுக்கு சொந்தமானவை.
கலவரம் வெடித்ததும், ஊர்வலத்தில் பங்கேற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், அருகில் உள்ள நல்ஹார் மகாதேவர் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். அந்த கோவிலுக்குள் 2,500 ஹிந்துக்கள் உயிருக்கு பயந்து பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கலவரக்காரர்கள் கோவில் மீது துப்பாக்கியால் சுட்டும், கல் வீசியும் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
நிலைமை கட்டுக்குள் இல்லாததால், போலீசார் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. நேற்று முன்தினம் இரவு, கோவிலுக்குள் இருந்தவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே, குருகிராமின் செக்டார் 57 பகுதி யில் உள்ள அஞ்சுமன் மசூதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில், கும்பல் ஒன்று நுழைந்தது. அங்கு குழுமி இருந்தவர்களை தாக்கிவிட்டு மசூதிக்கு தீ வைத்தது.
அப்போது அந்த கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில், மசூதியின் துணை இமாம் சாத், 26, என்பவர் உட்பட இருவர் காயம் அடைந்தனர். சிகிச்சை பலனின்றி துணை இமாம் உயிரிழந்தார்.
![](http://namthesam.tv/wp-content/uploads/2023/08/364712484_2416506045216324_6535937666791144205_n.jpg)
இதன் வாயிலாக, கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
கலவரம் தொடங்கிய நுாஹ் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:
இந்த கலவரம் மிக தெளிவாக திட்டமிடப்பட்டு ஏவப்பட்டுள்ளது. இது குறித்து இப்போதே எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை. முழுமையாக விசாரணை நடத்தி, கலவரத்துக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹரியானாவின் நுாஹ் மற்றும் சோனா மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. ஆனாலும், அசம்பாவிதங்கள் எதுவும் நேற்று நிகழவில்லை.
துணை ராணுவப் படையினர் மாவட்டம் முழுதும் கண்காணிப்பில் உள்ளனர்.
ஹரியானாவின் வல்லப்கர் என்ற இடத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள பிரமுகர் மோனு மானேசர் என்பவர் தன் சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய, ‘வீடியோ’ பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, நுாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பல், ஊர்வலத்தின் மீது கல் எறிந்ததாக கூறப்படுகிறது.