வவுனியா, தோணிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் 5 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்குத் தீயிட்டது.
இந்தச் சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 21 வயது இளம் குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அதில் எரிகாயங்களுக்குள்ளான இளம் குடும்பப் பெண்ணின் கணவனும் பின்னர் உயிரிழந்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. பலரிடமும் வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தன.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 5 பேரைச் சந்தேகத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.