தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் 4-வது நாளான நேற்று சிவகங்கையில் மக்களைச் சந்தித்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் (முன்பு ட்விட்டர்) பதிவிட்டுள்ள அவர், “இன்றைய ‘என் மண், என் மக்கள்’ பயணம், வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் அமைந்தது மகிழ்ச்சி.
மக்களைச் சந்தித்து, பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளைக் கூறும் நமது பயணத்தின் பெயர் ‘என் மண் என் மக்கள்’. மத்திய அரசின் மக்களுக்கான நலத்திட்டங்கள், அதன் மூலம் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என கோடிக்கணக்கானோர் நம்மோடு இருக்கிறார்கள்.
ஆனால், திமுக ஒரு நடைபயணம் சென்றால், அதன் பெயர் ‘என் மகன் என் பேரன்’ என்பதாகத்தான் இருக்கும். சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்து ஊழலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது திமுக.” என்று தெரிவித்துளளார்.
முன்னதாக, சிவகங்கையில் நேற்று மாலை நடைபயணம் மேற்கொண்ட போது அண்ணாமலை பேசியதாவது: மக்கள் பணிக்காக தான் அமைச்சர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் எந்த பணியும் செய்யாமல் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு துறை இல்லா அமைச்சராக்கி ஊதியம் கொடுக்கின்றனர். தந்தை, தாய், மகனை வெவ்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறை விசாரிப்பது இந்தியாவிலேயே ப.சிதம்பரம் குடும்பத்தை தான். இவ்வாறு அவர் கூறினார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.