Home Srilanka அரசின் ஊதுகுழலான டக்ளஸ் எங்கள் போராட்டத்தை எப்படி ஆதரிப்பார்? – ஹர்த்தாலன்று ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தொடர்பில்...

அரசின் ஊதுகுழலான டக்ளஸ் எங்கள் போராட்டத்தை எப்படி ஆதரிப்பார்? – ஹர்த்தாலன்று ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தொடர்பில் கண்டனம்.

0

“வடக்கு – கிழக்கில் கடந்த வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பாலேயே முன்னெடுக்கப்பட்டது. மனிதாபிமானமுள்ளவர் என்றால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதை ஆதரவளித்திருக்கவேண்டும். அரசின் ஊதுகுழலான அவரிடம் அதை எதிர்பார்க்க முடியாது.”

இவ்வாறு பல தரப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாட்டைக் கண்டித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தலையீடு  கோரி கடந்த வெள்ளியன்று வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் என்பது மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்திசார் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒன்றே தவிர, அரசியல் கூட்டமல்ல. எனவே, அரசியல் காரணங்களுக்காக இதை ஒத்திவைக்குமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்ததாவது:-

“டக்ளஸின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது. பாதிக்கப்பட்ட தரப்புக்களின் கோரிக்கைகளை மதித்து ஒரு நாள் தாமதமாக அந்தக் கூட்டத்தை நடத்துவதால் பெரிதளவில் பாதிப்பை இவர் சந்திக்க போவது கிடையாது. மனிதாபிமானமற்ற ஒருவராக அவர் தன்னை நிரூபித்து வருகின்றார். அரசுடன் இணைந்து மனித விரோதச் செயலைச் செய்தவர் தொடர்ச்சியாக மனித விரோதச் செயலையே செய்து வருகின்றார்.” – என்று குறிப்பிட்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்ததாவது:-

“அரசுடன் இணைந்து நிற்கும் ஒரு தரப்பினரே டக்ளஸ் கும்பல். இவர் இனப்படுகொலை செய்த அரசின் ஒரு தரப்பினராகவே இருக்கின்றார். அரசுக்கு சர்வதேசத்தில் நல்ல பெயர் பெற்றுக்கொடுக்கவும் பதவி சுகபோகவாழ்கைக்காகவும் தமிழருடைய நலன்களைப் புறக்கணித்தே இவர்கள் காலம் காலமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இவர் தொடர்ச்சியாக அங்கம் வகிக்கும் அரசுதான் இந்தக் கொக்குத்தொடுவாய் முதல் காணப்படும் மனிதப் புதைகுழிகளுக்கான காரணகர்த்தாக்கள். இங்கு எந்த அரசியல் விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக நீதி கேட்ட ஒரு பயணத்தின் படிநிலைதான்.” – என்றார்.

கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் கே.ரொபின்ஸன் தெரிவித்ததாவது:-

“கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் அமைச்சர் டக்ளஸின் கருத்தைக் கண்டிக்கின்றோம். தமிழருக்கு எதிராக அரசோடு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு மிக விரைவில் பாடம் புகட்டுவோம். துணையாக நிற்காவிட்டாலும் தொல்லையாக நிற்க வேண்டாம். யார் எதிரில் நின்றாலும் தூக்கி எறியப்படுவீர்கள்.” – என்றார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்ததாவது:-

“அரசுடன் உறவைத் தொடர்வதற்காக எதையும் செய்யக்கூடியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரின் கருத்தால் நாம் ஆச்சரியமடையவில்லை. தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் இவர்களைப் போன்ற அரச விசுவாசிகளாலே மழுங்கடிக்கப்பட்டு தொடர்ச்சியாகத் தமிழர்கள் ஒரு தீர்வைப் பெறமுடியாமைக்குக் காரணமாக அமைந்தது. வெள்ளியன்று நடந்தது பாதிக்கப்பட்ட தரப்புக்களின் ஜனநாயகப் போராட்டமே தவிர அரசியல் அல்ல.” – என்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version