வடக்கின் போருக்கு பிந்திய 14 ஆண்டு காலத்தில் கிராமிய மக்களுக்கான பொது அமைப்புக்களின் தலைமைத்துவம்
வலுவிழந்திருப்பதாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச செயலகத்தில் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்காக இன்று (31)ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்தெழுச்சி குழுக்களுக்கான கிராம மட்ட பொது அமைப்புக்களின் முன்னுதாரணமான தலைமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்;
நடந்து முடிந்த யுத்தம் மூலமான இடம்பெயர்வும் கூடவே வெளி உலகை நோக்கிய புலம்பெயர்வும் தமது இருப்புக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் மக்கள் தமது சொந்தக்காலில் நிற்றல் என்பதை அடியோடு இல்லாமல் செய்துள்ளன.
இந்த நிலமையானது வாழ்விடச்சூழலில் மக்களின் சுய தேவைப் பூர்த்திக்கான உற்பத்தி முயற்சிகளை மறுதலித்திருப்பது மட்டுமன்றி அம்மக்களுகிடையே இதுவரை இருந்து வந்த நெருக்கமான உறவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக கிராமங்களில் மக்கள் ஒன்று கூடுவதையும் தமது அவசிய நடவடிக்கைகளுக்காக ஒன்றுபட்டு தீர்மானமெடுப்பதையும் அதற்கான தலைமைத்துவத்தை யும் இன்று அவசியமற்ற தாக்கியுள்ளன.
இந்த நிலமையை கவனத்திலெடுத்து கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புத்தெழுச்சி குழுக்கள் மூலமான கிராமிய மக்களுக்கான தலைமைத்துவத்தின் அவசியத்தை கவனம் செலுத்தியிருக்கிறார்.
இதனை நாமும் புரிந்து கொண்டு காலத்தின் கட்டாய பணியாக கருதி இக் கிராமிய மட்ட தலைமைத்துவத்தை உருவாக்கி வலுப்படுத்த நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.