தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை நேற்று தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபயணத் தொடக்க விழாவில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “இந்த நடைபயணம் வெறும் அண்ணாமலையின் நடைபயணம் அல்ல. இது ஒவ்வொரு பா.ஜ.க தொண்டனின் நடைபயணம். கூட்டணி கட்சியினரின் நடைபயணம். இதனை ஒரு வேள்வியாக கருதுகிறோம்.
விவேகானந்தர் கால்நடையாக கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார். அதை போல் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய விவேகானந்தர் ராமேஸ்வரம் வந்து இறங்கினார். அப்போது அவர், பாரத மாதா இனி தூங்கப்போவதில்லை என்று கூறினார். அந்த வார்த்தையை மெய்ப்பட வைத்தவர் பிரதமர் மோடி. இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவைப் பெருமைப்பட வைக்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சியை உன்னிப்பாக உலக மக்கள் கவனித்து வருகின்றனர். கோடிக்கணக்கான மக்களைப் பசி என்ற கோரப்பிடியில் இருந்து மோடி மீட்டு வருகிறார். கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசு வீடு கட்டிக்கொடுத்துள்ளது.
பிரதமர் மோடி ஒரு சாதாரண மனிதன். அதனால், தற்போது இந்தியாவில் சாதாரண மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். குஜராத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதன் இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். பாரத தாய் போல் தமிழ்த்தாயும் இனி விழித்து எழ வேண்டும். தி.மு.க அரசு வெறும் ஊழல் செய்யும் அரசாகத்தான் இருக்கிறது. ஒரு குடும்பம் மட்டும்தான் சம்பாதித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.
மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார். இந்தியாவிலேயே வேறு எந்தப் பிரதமரும் தமிழர்களின் புகழையும் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி அளவுக்கு உயர்த்திப் பிடித்தது கிடையாது. அவர் தமிழை மிகவும் நேசிக்கிறார். மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் எல்லாம் அனைத்து வீடுகளிலும் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன்கிழமை கே.சி.ஆர். பிரதமர் என ஒவ்வொரு நாளும் ஒரு பிரதமர்கள் வருவார்கள். கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவை தனது மூச்சாக, கருவாக செயல்படுகின்ற மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்.
மூன்றாவது முறையாக அவர் பிரதமராக அமரும் போது இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக உயரும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்த யாத்திரைக்கு தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது” என்று கூறினார்.