இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும், இனஅழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, நியாயமான தீர்வினை வழங்க சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேச நியமத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுகள் இடம்பெறவேண்டும் என்பதுடன், சர்வதேச கண்காணிப்பில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகவிருக்கின்றது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், பொறுப்புக்கூறல் விடயத்திலே இலங்கை அரசிற்கு சர்வதேசம் அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும், தமிழ் மக்களின் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பை நடாத்தியிருக்கின்றனர்.
இது தவிர குருந்தூர்மலை விவகாரத்தில் எமது சைவ வழிபாடுகளை மேற்கொள்ளலாமென நீதிமன்று கட்டளை பிறப்பித்தும், அக் கட்டளைகளுக்கு மாறாக சில இனவாதக் கும்பல் எம்மை வழிபாடுகளில் ஈடுபடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறாக தமிழர்களின் மீது மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயற்படும் இலங்கை அரசிற்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக நியாயமான தீர்வினை வழங்க சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.