Friday, December 27, 2024
HomeSrilankaPoliticsபேச்சை முறித்துக்கொண்டு வெளியேறிய ஜனாதிபதி! - கோபமடையக் காரணம் என்ன?

பேச்சை முறித்துக்கொண்டு வெளியேறிய ஜனாதிபதி! – கோபமடையக் காரணம் என்ன?

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதொடர்பில் ஆராய்வதற்காகக் கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேச்சை முறித்துக்கொண்டு திடீரென வெளியேறிச் சென்றார். இதனால் கூட்டம் எந்தவித உருப்படியான தீர்மானமோ முடிவோ இன்றி இடைநடுவில் முடிவடைந்தது.

கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசும்போது, அதிகாரப் பகிர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிவித்திருந்தார். அவர் நாடு திரும்பிய பின்னர் நேற்று (26) அந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 8 மணி வரையும் தொடர்ந்தது.

கூட்டத்தின் தொடக்கத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றினார். “மாகாண சபைகளைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதானால், அதில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர்செய்ய வேண்டும் என்றார். அதற்காகவே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன” என்றார்.

“நாட்டின் கொள்கைசார் முடிவுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டு ஏனைய அனைத்து விடயங்களையும் மாகாண சபைகள் மேற்கொள்ளும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்” என்றும் ஜனாதிபதி கூறினார்.

அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார,  வீரசுமன ஆகியோர் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர். விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, சரத் வீரசேகர போன்றோர் வழக்கம்போல் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர்.

தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையில், “தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உள்ளவர்கள். அதனை உள்ளகமாகப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று நீண்ட காலமாகக் காத்திருக்கின்றோம். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. காலத்தை இழுத்தடிப்பதும் ஏமாற்றுவதுமே தொடர்கின்றது. இப்படிச் சென்றால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோர வேண்டி வரும். பயன்படுத்துவதற்காக வெளிநாடுகளின் உதவிகளை நாடவேண்டியவர்களாக இருப்போம்” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

“இதுவரைக்கும் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே ஆராயப்பட்டு இணங்கப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் மீண்டும் கூட்டங்கள் தேவையில்லை” என்றார் சம்பந்தன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் உரையாற்றும்போது, மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு அது பற்றிப் பின்னர் பேசலாம், அது பற்றி ஆராய்ந்து தேர்தலை நடத்தும் முறையைத் தீர்மானிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “இந்த நாடாளுமன்றம் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்கனவே ஒரு தெரிவுக் குழுவை சபாநாயகர் தலைமையில் நியமித்தது. அதன் அறிக்கையும் இங்கே இருக்கின்றது (தூக்கிக் காட்டினார்). அதில் பழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றது. அதற்காகவே என்னால் தனிநபர் சட்டவரைவு ஒன்றும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது” என்றார்.

உடனே ஆத்திரப்பட்டுக் குறுக்கிட்ட ஜனாதிபதி, நீங்கள் அதிகாரப் பகிர்வைத்தானே இதுவரை கேட்டு வந்தீர்கள், இப்போது எதற்குத் தேர்தலைக் கேட்கிறீர்கள் என்று எகிறினார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர், நாம் நீண்ட காலமாகவே தேர்தலை வலியுறுத்தி வருகின்றோம், அதற்காகவே சட்டவரைவையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கின்றோம் என்றனர்.

அதற்கு இப்போது இரண்டையும் செய்ய முடியாது இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும் என்று ஆத்திரப்பட்டார் ஜனாதிபதி.

அதிகாரப் பகிர்வு அல்லது தேர்தல் இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும் என்றார் அவர்.

“அப்படி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டாலும் யாருடன் பகிர்ந்து கொள்வீர்கள்? தேர்தலை நடத்தி மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்தானே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்? எனவே இரண்டும் வெவ்வேறானவை இல்லையே. தேர்தலையும் நடத்திக்கொண்டு அதிகாரப் பகிர்வு விடயங்களையும் முன்கொண்டு செல்லலாம்” என்று விளக்கமளித்தார் சுமந்ததிரன்.

அப்போது இடைமறித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், “மாகாண சபைகைளப் பலப்படுத்தும் வகையில் அதிகாரப் பகிர்வை முதலில் செய்து கொண்டு பின்னர் தேர்தலை நடத்தலாம்” என்றார்.

ஆனால் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் அறிவித்தார்.

”இது வடக்கு மாகாணத்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் (விக்கி) கருத்து மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் இங்கிருக்கிறார்கள். அவர்கள் சம்மதத்துடன் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை எதிர்க் கின்றோம்” என்றார் சுமந்திரன்.

அதற்கு அதிகாரப் பகிர்வைக் கேட்டு வந்த நீங்கள் திடீரென இப்போது எதற்கு தேர்தலை வலியுறுத்துகிறீர்கள் என்று ஆத்திரத்துடன் கேட்ட ஜனாதிபதி, “சரி இத்துடன் கூட்டம் முடிகின்றது” என்று கூறிக்கொண்டு கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இதனால் கூட்டம் பாதியிலேயே எந்தவித உருப்படியான முடிவுகளும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments