தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக தலைவர்களின் சொத்து விவரம் மற்றும் பல்வேறு ஆவணங்களை பெட்டியில் வைத்து ஒப்படைத்தார். திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாக அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக ஃபைல்ஸ் 2 என்ற பெயரில் அண்ணாமலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இடிஎல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் 600 கோடி ரூபாய் என மொத்தம் 5600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.