இலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை குறிக்கும் கருப்பு ஜூலையின் 40 ஆண்டு நினைவை ஒட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் 1983ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பை நினைவூட்டி இருந்த ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தமிழர்களுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன அழிப்பில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோர் குறித்த மன காயங்கள் இன்னும் மக்களிடம் ஆராது இருப்பதாக ட்ரூடோ குறிப்பிட்டார்.
1983ம் ஆண்டு இன அழிப்பு சம்பவத்துக்கு பிறகு, இந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கனடாவில் பாதுகாப்பாக வாழ்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் இந்த நடவடிக்கையின் கீழ், அப்போது கனடாவிற்கு 800 பேர் வரை புலம்பெயர்ந்து வந்ததாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் கடந்த காலங்களில் நடைபெற்ற இன படுகொலை, மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டும் என்று கனடா தொடர்ந்து கோரிக்கையை முன்வைக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அரசியல்,
பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும், அத்துடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் கனடா நிச்சயம் முன்னெடுக்கும் என ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.