சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு கூடிய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டமொன்றினை இலங்கை தொழிற்கல்வி ஆணைக்குக்குழு சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் ஆரம்பித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 23 தொழில் துறைகளில் சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் இத்திட்டத்திற்கான உடன்படிக்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கையிலுள்ள சவூதி அரேபியாவின் தூதுவருக்குமிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
குறிப்பிட்ட உடன்படிக்கை கடந்த 11 ஆம் திகதி முதல் அமுலில் உள்ளதாக தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.லலிததீர தெரிவித்தார்.
மொரட்டுவயிலுள்ள இலங்கை – ஜெர்மனி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், ஒரு கொடவத்த கொரியா – இலங்கை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் மொரட்டுவ கைத்தொழில் பொறியியல் பயிற்சி நிறுவனம் எனும் நிறுவனங்களில் இது தொடர்பான திறமைகளை உறுதி செய்வதற்கான பரீட்சைகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொழிற்கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரீட்சைகளில் சித்தியடைபவர்களின் அனைத்து தகவல்களும், முடிவுகளும் சவூதி அரேபியாவின் அரச தகவல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை தொழிற்பயிற்சி கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 071 4817629 எனும் இலக்கத்துடன் அல்லது manjula@tvec.gov.lk மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ள முடியும்.