Home World கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைத்த விமானம் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி.

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைத்த விமானம் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி.

0

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சில நாடுகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. குறிப்பாக கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரீசில் உள்ள ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் சோர்பு மற்றும் எவியா தீவிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மேலும் விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இந்த நிலையில் எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் விழுந்து நொறுங்கியது. சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் 2 விமானிகள் இருந்தனர்.

காட்டுத்தீ மீது தண்ணீரை ஊற்றி விட்டு அந்த விமானம் திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. தரையில் மோதிய விமானம் வெடித்து சிதறியதால் தீ பிழம்பு எழுந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானிகள் 2 பேர் பலியானதையடுத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காட்டுத்தீ காரணமாக கிரீசில் கடந்த ஒரு வாரத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் மற்றும் பிற நிலங்கள் தீயில் கருகி உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version