இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ (Lets Get Married-LGM). தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் டோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து ‘லெட்ஸ் கெட் மேரிட்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே. விஜய், இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் டோனியின் மனைவி சாக்ஷி, “கதை நன்றாக அமைந்தால் டோனி ஹீரோவாக நடிப்பார். அவர் கேமராவைப் பார்த்து வெட்கப்படுபவர் இல்லை. 2007-ல் இருந்து நிறைய விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், எப்படி நடிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அப்படி அவர் நடித்தால் ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்வேன்” என்று கூறியுள்ளார்.