வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த 23.07.2023 அன்று நல்லிரவு (அதிகாலை) 19 வயது பெண் ஒருவருக்கு பிறந்த தினத்தை கொண்டாடிக்கொண்டு இருந்த நேரத்தில் பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது வாள் வீச்சு நடத்தியிருந்ததுடன் பெற்றோல் வீசி வீட்டிற்கும் தீ வைத்திருந்தனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரின் தங்கை முறையான 21வயது இளம் குடும்ப பெண் ஒருவர் (2மாத கர்ப்பிணி) சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
மேலும் வாள் வீச்சு இடம்பெற்றதில் படுகாயமைடந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அவ்வேளையில் அங்கிருந்த 9பேர் வரையில் எரிகாயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளிகள் ஊடகங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த இளம் குடும்ப பெண்ணின் கணவரான சுகந்தன் என்பவர் முற்றிலும் எரிகாயத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்றைய தினம்(25) வவுனியா பொதுவைத்தியசாலையில் இருந்து அவரது உறவினர்களால் யாழி்ல் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தார் எனினும் இன்று(26) அதிகாலை 1.30மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடலம் வவுனியாவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதுடன் இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 8பேர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த திகலூட்டும் சம்பவம் வவுனியாவில் பலரையும் பாதிப்படைய வைத்துள்ளதுடன் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது பொலிஸார் பலமுனைகளில் விசாரனைகளை மேற்கொண்டுவரும் நிலையிலும் இதுவரை குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.