முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த (23) ஞாயிற்றுக் கிழமையன்று கல்கமுவ சந்தபோதி தேரர், மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் கல்கமுவ சந்தபோதி தேரருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூகசெயற்பாட்டாளர் அன்ரனிஜெயநாதன் பீற்ரர் இளஞ்செழியன் ஆகியோரால் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 14.07.2023 ஆம்திகதி, குருந்தூர்மலையில் சைவத்தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தநிலையில், முதல் நாளான 13ஆம் திகதி முல்லைத்தீவு பொலிசார் குறித்த பொங்கல் வழிபாட்டிற்கு, முல்லைத்தீவு நீதிமன்றில் தடையுத்தரவைக் கோரியிருந்தனர்.
இதன்போது முல்லைத்தீவு நீதிமன்றால் சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
அக் கட்டளைகளில் குறிப்பாக “குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவ்விதமான சிலைகள் வைப்பதோ, சின்னங்கள் வைப்பதோ, கட்டுமானங்கள் மேற்கொள்வதோ தொல்லியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும்.
குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவரும் ஏதேனும் சிலைகள் வைத்தாலோ, சிவலிங்கம், திரிசூலம் போன்றவற்றை நிறுவினாலோ, ஏதேனும் கட்டுமானங்களையோ, நிர்மாணங்களையோ செய்தால் அது நீதிமன்றக் கட்டளையினை மீறும் நீதிமன்ற அவமதிப்புக்குற்றமாகும். எனவே எவரும் இவ்வாறான செயல்களைச் செய்தால் அவர்களுக்கு எதிராகப் பொலிசாரால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தாக்கல் செய்யப்படமுடியும்.” உள்ளிட்ட கட்டளைகளும் முல்லைத்தீவு நீதிமன்றினால் கடந்த 13ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறும் விதமாக கடந்த (23) ஞாயிறன்று கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் புத்தர்சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதாகவே முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு குருந்தூர்மலை அடிவாரத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் உள்ள நிலையில் இவ்வாறு புத்தர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு, குருந்தூர்மலையில் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருப்பதாக முறைப்பாட்டாளர்களான ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் தெரிவித்தனர்.