Home Srilanka ஜனாதிபதியின் சர்வகட்சிக் கூட்டம்: தமிழ்த் தரப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை!

ஜனாதிபதியின் சர்வகட்சிக் கூட்டம்: தமிழ்த் தரப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தீர்மானித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி. என்பன புறக்கணிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

“ஜனாதிபதி சந்திக்க விரும்புகின்றார். நாங்கள் நிச்சயம் கலந்துகொள்வோம்” என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

“இன நல்லிணக்கம் தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவே ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது வெறுமனே வாய் பேச்சில் மாத்திரம் இருக்க முடியாது. இந்தியாவிலிருந்து வந்தவுடன் இதனைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அங்கு வலியுறுத்தப்பட்டதால்  அவர் இதனைப் பற்றி பேசுகின்றார். கூட்டத்தில் பங்கேற்றால்தான் என்ன நடக்கின்றது என்பது தெரியும்” – என்று புளொட் அமைப்பின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவருமான த.சித்தார்த்தன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. கருத்துரைக்கையில், “இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முதல் இரு இனத்தையும் சமமாக நடத்த வேண்டும். ஏற்கனவே ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்கின்றேன். வெறுமனே இன நல்லிணக்கம் என்ற போர்வையில் கூட்டத்தை நடத்தினால் நான் அதில் கலந்துகொள்வேனோ தெரியவில்லை. பெரும்பாலும் கலந்துகொள்ளாமல் இருப்பேன். ஆனாலும் இறுதி முடிவு எடுக்கவில்லை” – என்றார்.

ஜனாதிபதியின் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெறவுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version