கோவை கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை வடவள்ளி குறிஞ்சி வீதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி லக்ஷயா என்கிற சுருதி, பிரெஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் பெற்றவர். ராஜேஷின் மனைவி அப்பகுதியில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இவர்களது மகள் யக்க்ஷிதா. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் ராஜேஷின் தாயார் பிரேமாவும் வசித்து வந்தார். இவர்கள் அங்கு ஓர் வாடகை வீட்டில் குடியிருந்தனர்.
கடந்த சில நாள்களாக அவர்களது வீடு உள்பக்கமாக பூட்டப்படிருந்தது. தொடர்ந்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து லக்ஷயாவின் தந்தை வடவள்ளி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்ஷிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்து சடலமாகவும் இருந்தனர். அந்த வீட்டில் இருந்து லக்ஷயா எழுதிய கடிதத்தில், ‘தங்கள் தற்கொலைக்கு தீபக் மற்றும் ஜெயபாரத் தான் காரணம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயபாரத் மற்றும் தீபக் ஆசிரியர்கள் ஆவர். இருவரும் இணைந்து அந்தப் பகுதியில் தனியார் டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளனர்.