உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் அளித்து வருவதால் இப்போரில் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இதில் ரஷிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை உக்ரைன் நடத்தி உள்ளது. மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெடிமருந்து கிடங்கில் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழுந்தது. அங்கு பெரும் கரும்புகை வெளியேறியது. பயங்கர வெடிசத்தங்களை கேட்டதும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு அலறியபடி வெளியே வந்தனர்.
இந்த தாக்குதல் காரணமாக கிடங்கை சுற்றி 5 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக வீடியோக்கள் வெளியாகின. ரெயில் நிலையம் அருகே உள்ள வெடிமருந்து கிடங்கில் இருந்து விண்ணை மூட்டும் தீ பிழம்பு எழுப்பும் காட்சி பதிவாகி இருந்தது. மற்றொரு வீடியோவில் விமான நிலையம் அருகே புகை மற்றும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும் காட்சி இருந்தது. இதுகுறித்து கிரிமியா கவர்னர் செர்ஜி அக்சியோ னோவ் கூறும்போது, வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்றார். மேலும் கிரிமியா பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வெடிமருந்து கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் தரப்பில் கூறும் போது, கிரிமியாவின் ஒக்ய பிரஸ்கி நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரஷிய ராணுவ கிடங்குகள் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது என்று தெரிவித்தது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
பாலமும் சேதமடைந்தது. இந்த நிலையில் கிரிமியா பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரிமீயா பாலத்தில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலம் மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப்ரவரியில் முழுமையாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.