தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு புழல் பெண்கள் ஜெயிலுக்கு சென்று பெண் கைதிகள் பராமரிக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த பெண்கள் குஷ்புவை கண்டதும் ஆர்வத்துடன் அவரை பார்த்தனர். பெண் கைதிகள் தயாரித்த பொருட்களையும் பார்வையிட்ட குஷ்பு அவர்களை பாராட்டினார்.
விசாரணை கைதிகளாகவும் தண்டனை பெற்ற கைதிகளாகவும் சிறையில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கையூட்டி, ஆறுதல் கூறியதுடன், பிரச்சினைகளை சந்திப்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகிவிடும். அதையும் கடந்து துணிச்சலுடன் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதுபற்றி அவர் கூறும் போது, “மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற வகையில் ஜெயிலில் பெண்கள் நடத்தப்படும் விதம், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் பார்ப்பதற்காக சென்றேன். நான் எதிர் பார்க்காத வகையில் கைதிகள் ஜெயிலை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் பராமரிப்பதாகவும் கூறினார்கள்.
கைதிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்து கொடுப்பது பற்றி ஜெயிலருடன் நீண்ட நேரம் விவாதித்தேன். குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வருபவர்களையும் நன்கு கவனித்து பொருளாதார ரீதியாக அவர்களின் பாதுகாப்புக்கு உதவ கூடியதை கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
மேலும் அதை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பது பற்றிய எனது எண்ணங்களையும், யோசனைகளையும் பகிர்ந்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.