சென்னையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார், திருமேனி (அர்ஜூன் தாஸ்). அவமானங்களாலும் அவமதிப்புகளாலும் துவண்டு போயிருக்கும் அவருக்குப் பணக்கார மங்கையர்க்கரசியின் (சாந்தா தனஞ்செயன்) வீட்டில் வேலைபார்க்கும் சுப்புலட்சுமி (துஷாரா விஜயன்) மீது வருகிறது காதல். இந்தக் காதல், மன இறுக்கத்தில் இருக்கும் திருமேனியை, மயிலிறகால் வருடுகிறது.
இந்நிலையில் மங்கையர்க்கரசி திடீரென இறந்து விட, அவரை சுப்புலட்சுமியும் திருமேனியும் திட்டமிட்டுக் கொன்றதாகச் சொல்கிறார்கள் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மகளும் (வனிதா விஜயகுமார்) மகனும் (அர்ஜுன் சிதம்பரம்). இந்தப் பழியிலிருந்து இவரும் எப்படி தப்பிக்கிறார்கள்? இதைச் சுற்றி நடக்கும் எளியவன், வலியவனுக்கான அரசியல்தான் அநீதியின் கதை.
வெயில், அங்காடி தெரு படங்களில் வறுமை மக்களின் வலி நிறைந்த வாழ்க்கையை ஆழமாகப் பேசிய இயக்குநர் வசந்தபாலன், இன்றைய அவசர யுகத்தின் நுகர்வு கலாச்சார அவலத்தையும் சக மனிதனை நேசிக்க மறுக்கும் மனிதர்களின் கருணையற்ற ஆவேச மனநிலையையும் த்ரில்லராக தந்திருக்கிறார்.
அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சினிமாத்தனம் அதிகமற்ற காட்சி அமைப்புகளும் ரசனையான வசனங்களும் அநீதிக்கு ஆதரவாகக் கை கொடுக்கின்றன. உலுக்கி எடுக்கிற அந்த பிளாஷ்பேக் காட்சி சிறிது நேரமே என்றாலும் பெரும் காய்களைத் தாங்கும் சிறு செடி போல மொத்தப் படத்தையும் தூக்கி நிற்கிறது.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் அந்தந்தப் பாத்திரங்களுக்கான அழுத்தமான எழுத்தும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. திருமேனிக்கு ஏற்படும் மன நோயும் அது ஏற்படுவதற்கான அழுத்தமானப் பின்னணியும் நம்பும்படியாகவே இருக்கின்றன. அதோடு, அவர் மனம் உடைந்து கொலைச் செய்ய தூண்டும் நேரத்தில் அதைத் தாண்டி அவர் கடந்து செல்லும் இயல்பும் கதையோடு இணைந்திருக்கின்றன.
காதலில் தொடங்கும் படம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகரமான கதைக்குள் நுழையும் போது எழுந்து உட்கார வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி திரைக்கதையில் ஏற்படும் தடுமாற்றம் எங்கெங்கோ சென்று வழக்கமான ஹீரோயிச பாணியில் முடிவது ஏமாற்றம்.
மனநோய் பாதித்த, சாதாரண தெற்கத்தி இளைஞனாக ஈர்க்கிறார், அர்ஜுன் தாஸ். பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அவரின் முகபாவமும் குரலும் உடல் மொழியும் தேர்ந்த நடிகராக அவரைக் காட்டுகிறது.
துஷாரா விஜயன், வேலைக்காரப் பெண்ணாக ரசிக்க வைக்கிறார். குடும்ப வறுமை, பணக்கார வீட்டில் அடிமை வேலை, பொய்யால் ஏற்படும் பதற்றம் என எளிமையான சுப்புலட்சுமியாகவே நடிப்பில் மிரட்டுகிறார்.
பிளாஷ்பேக்கில் அப்பாவித்தனமான, ஒரு சாக்லேட் வாங்கி கொடுக்க இயலாத தந்தையாக, காளி வெங்கட் நடிப்பில் இன்னும் ஒரு படி உயர்ந்திருக்கிறார். நண்பர்களாக வரும் பரணி, ஷா ரா, கடை முதலாளி சிவா, பணக்காரப் பாட்டி சாந்தா, அமெரிக்க ரிட்டர்ன் வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, கொடுத்த காசுக்கு அடித்துத் துவைக்கும் போலீஸ் அதிகாரி ஜேஎஸ்கே, சில காட்சிகள் மட்டுமே தலைகாட்டும் பாக்கியம் சங்கர் என துணை கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
மழைக்கு ஒதுங்கி நில்லுங்கன்னு சொல்ற குரலும் தலை துவட்ட துண்டு கொடுக்கற கையும் நிச்சயம் பணக்காரங்களோடதா இருக்காது’, ‘இங்க எல்லாமே பிரைவேட் ஆயிடுச்சு, போற போக்க பாத்தா இந்தியான்னு எழுதி கீழ பிரைவேட் லிமிடெட்னு போட்ருவாங்க போல’ என்பது போன்ற எஸ்.கே.ஜீவாவின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
பின்னணி இசையில் கதையோடு இழுத்துச் செல்கிறார் ஜி.வி.பிரகாஷ் . எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு, பிளாஷ்பேக் காட்சியில், தென்காசி பகுதியின் மண்மணத்தை அப்படியே அள்ளி வந்திருக்கிறது.
நேர்மையான வேலைக்காரப் பெண்ணான சுப்புலட்சுமி திடீரென சொல்கிறப் பொய், அந்தக் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை பொட்டென்று சரித்துவிடுகிறது. வனிதா விஜயகுமார் காவல் நிலையத்துக்குள் துப்பாக்கியால் சுடுவது, காட்சியின் நம்பகத்தன்மையைக் குலைக்கிறது.படத்தின் கதையோடு உணவு விநியோகத் தொழிலாளர்கள் பிரச்சினை அக்கறையாகச் சொல்லப்பட்டாலும் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இருந்தாலும் இந்த அநீதியை வரவேற்கலாம்.