இந்தோனேசியா, பாலியில் பாரடைஸ் பாலி என்கிற உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார் ஜஸ்டின் விக்கி (33). இவர், கடந்த 15ம் தேதி அன்று ஜிம்மில் சுமார் 210 கிலோ எடையை பார்பெல்லில் வைத்து தோல்களில் சுமந்தடி ஸ்குவாட் செய்ய முயன்றார்.
அப்போது, எடை தாளாமல் ஜஸ்டினால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இதில், பேலன்ஸ் இன்றி பார்பெல் ஜஸ்டினின் கழுத்தில் வேகமாக விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜஸ்டினை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் கழுத்தின் எலும்பிலும், இதயம் மற்றும் நுரையீரல் செல்லும் நரம்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஜஸ்டினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இருப்பினும் ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பாரடைஸ் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவில், “ஜஸ்டின் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பதை விட மேலானவர். அவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் கலங்கரை விளக்கமாக இருந்தார்” என்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளது.