சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேதான் குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி சைவத் தமிழ் மக்களின் வழிபாடுகள் தடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிசார் 20.07.2023 நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்தினைப் பெறுவதற்காக குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் 08ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 14ஆம் திகதி முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற போது சைவத் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கடந்த 13.07.2023அன்று, முல்லைத்தீவு பொலிசாரால் குருந்தூர்மலை தொடர்பான வழக்கு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டு, மறுநாளான 14.07.2023 குருந்தூர்மலையில் இடம்பெற இருக்கின்ற சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகளைத் தடுக்குமாறு நீதிமன்றினைக் கோரியிருந்தனர்.
இருப்பினும் பொலிசாரின் இக் கோரிக்கையினை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந் நிலையில் கடந்த 14.07.2023ஆம் திகதி குருந்தூர்மலையில், சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகள், பொலிசாராலும் அங்கு குழுமியிருந்த பௌத்த தேரர்களாலும், பெரும்பான்மையின மக்களாலும் தடுக்கப்பட்டது.
இவ்வாறு சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 14.07.2023 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 17.07.2023 அன்று சைவவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே AR673/18 என்ற குருந்தூர்மலை வழக்கு நகர்த்தல் பத்திரம் அணைத்து நீதி மன்றிலே விசாரணைக்காகவும் எடுத்துக்கொள்ளப்பட்து.
குறித்த வழக்கிலே ஆலய அடியவர்கள் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் மன்றில் தோன்றியிருந்தனர்.
அந்தவகையில் சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகள் தடைசெய்யப்பட்டமை தொடர்பிலான புகைப்படங்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்று, பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய அடியவர்கள் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
இந் நிலையில் இது தொடர்பில் விளங்கமளிப்பதற்காக நீதிமன்றிலே தோன்றியிருந்த பொலிசார், தாம் சமாதானப் படுத்தும் நோக்கிலேதான் தாம் பொங்கல் வழிபாட்டினைத் தடுத்ததாக கூறியிருந்தார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மேலதிக தகவல்களைத் தொல்லியல் திணைக்களத்திடமிருந்தும்பெறவேண்டியதொரு தேவையிருப்பதால், குறித்த நாளில் குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்லியல் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தொல்லியல் திணைக்களத்தின் அறிக்கைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதிக்கு குறித்த வழக்குத் தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.