Friday, December 27, 2024
HomeUncategorizedகுருந்தூரில் சைவத் தமிழர்களின் பூர்வீகத்தை மறைத்துவிட்டு, அதன் மேல் பௌத்த முலாம் பூசுவதை ஏற்கமுடியாது.

குருந்தூரில் சைவத் தமிழர்களின் பூர்வீகத்தை மறைத்துவிட்டு, அதன் மேல் பௌத்த முலாம் பூசுவதை ஏற்கமுடியாது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் இருந்த தமிழர்களின் பூர்வீகத் தொல்லியல் வழிபாட்டு அடையாளங்களை காணாமலாக்கிவிட்டு, அதன்மேல் பௌத்த வரலாறுகளை எழுதி குருந்தூர்மலையை பௌத்த தொலியல் இடமாக்கும் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புச்செயற்பாட்டை ஒருபோதும் ஏறுக்கொள்ளமுடியாதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும், சரத் வீரசேகர ஆகியோர் தெற்கிலுள்ள பெரும்பாண்மையின மக்களின் மன நிலையைக் குழப்பி, இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் அரசியல் நோயாளிகள் எனவும்அவர் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறான அரசியல் நோயாளிகளை பெரும்பாண்மையின மக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்திருப்பது மிகவும் வேடிக்கையானது. குருந்தூர்மலையும், குருந்தூர்மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்புக் கிராமமும் தமிழ் மக்களுக்குரியவையாகும்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, பகுதியானது சைவத் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமாகும்.

அங்கு பரம்பரை பரம்பரையாக சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்துவந்தனர்.

தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்கள் பாரிய அளவில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், கால் நடைவளர்பு போன்ற தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி தேன் எடுத்தல், மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளிலும் இங்குவாழ்ந்த பூர்வீக தமிழர்கள் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இவ்வாறாக இந்த தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்கள் நெல் மற்றும், சிறுதானியங்களுடனும், பால், தயிர், நெய், தேன், இறைச்சி, என்பவற்றோடு பாலை, வீரை, முரளி உள்ளிட்ட காட்டுப் பழங்களை உணவுகளாக உட்கொண்டு தன்னிறைவாக வாழ்ந்துவந்துள்ளனர்.

இந்த தண்ணிமுறிப்பு கிராமத்தை தழுவி ‘நிலக்கிளி’ எனும் நாவல் இலக்கியம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

குறித்த நாவலை அண்ணாமலை பாலமனோகரன் என்னும் எழுத்தாளர் எழுதியுள்ளார்

இங்கு வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்களின் வாழ்வியலை நிலக்கிளி நாவல் தெளிவாகக் கூறுகின்றது.

அந்த நாவலில் கூட எமது தமிழ் மக்கள் குருந்தூர்மலையில் சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சைவ வழிபாட்டு அடையாளமான சூலம் இருந்ததாகவும் குறித்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு இந்த தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்த்த சைவத் தமிழ் மக்கள், அப்போது நிலவிய அசாதரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.

குறிப்பாக 1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பின் அயற்கிராமமான ஆண்டான் குளம் பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள்கூட இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர்.

இவ்வாறு இடப்பெயர்வைச்சந்தித்த தமிழர் பூர்வீகக் கிராமங்களில், குருந்தூர்மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்புக் கிராமம், அதேபோல அதன் அயற்கிராமமான ஆண்டான்குளம் ஆகிய தமிழர் பூர்வீகக்கிராமங்களே இதுவரையில் மீள் குடியமர்த்தப்படவில்லை.

குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலதடவைகள் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துமாறு கோரியும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

இவ்வாறு அங்கு வாழ்ந்த பூர்வீகத்தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகளை செய்துவருகின்றனர்.

திட்டமிட்ட வகையிலே அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யவில்லை என்பதுடன், தண்ணிமறிப்பு பாடசாலை தற்போது பூதன்வயல் கிராமத்தில் இயங்கிவருகின்றது.

இவ்வாறான சூழலில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து எம்மை குருந்தூர் மலைப் பகுதிகுள் போகவிடாமல் தடுத்து, அங்கிருந்த சைவ வழிபாட்டு அடையாளமான திரிசூலத்தையும், முன்னே இருந்த கல்லையும் காணாமல் ஆக்கியுள்ளனர்.

அத்தோடு அங்கு புதிதாக பாரிய அளவில் விகாரை ஒன்று நிறுவப்பட்டது.

இவ்வாறு தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் விகாரையை அடாத்தாக அமைத்துவிட்டு, அதை பௌத்த சின்னமாக அறிவிக்கக் கோருவது மிகவும் அபத்தமானது.

மேலும் அங்கே அகழ்வாய்வுகளின்போது சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டிருந்தது. அவ்வாறு அகழ்வாய்வுகளில் பெறப்பட்ட சிவலிங்கமானது எட்டுப் பட்டை கொண்ட எண்முகத் தாராலிங்கம் என பல ஆய்வாளர்களாலும் சொல்லப்பட்டது.

குறித்த சிவலிங்கம் பல்லவர்காலத்துக்குரியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந் நிலையில் அவ்வாறு பெறப்பட்ட சிவலிங்கத்தை எடுத்து தற்போது பௌத்த விகாரையின் உச்சிப் பகுதியில் வைத்துள்ளனர். குறித்த சிவலிங்கத்தை விகாரையின் ஒரு பாகமாக சித்தரித்துள்ளனர்.

இப்படியாக அங்கு திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புச் செயற்பாடுகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு எமது தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது.

தற்போது எமது தமிழர்களின் பூர்வீகம், இருப்பு, பண்பாடு, பாரம்பரியம், என்பவற்றைக் கேள்விக்குள்ளாக்குகின்ற விதத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசாங்கமும், பௌத்த சிங்கள பெருந்தேசியமும் இணைந்து முன்னெடுத்துள்ளது.

குருந்தூர்மலை விவகாரத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்படுவதை எம்மால் உணரமுடிகின்றது.

அந்தவகையில் தண்ணிமுறிப்பில் வாழ்ந்த தமிழ் மக்களைத் திட்டமிட்டு மீள்குடியேற்றப்படவில்லை.

தொடர்ந்து குருந்தூர்மலையில் அகழ்வாய்வு என்ற போர்வையில் அங்கிருந்த தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன.

அதேவேளை அங்கு புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டு இடத்தைப்போன்று சித்தரிப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

அங்கு அகழ்வாய்வுகளில் சிவலிங்கம் பெறப்பட்டபோதும் அதை பௌத்த விகாரையின் ஒரு அமைப்பைப் போல சித்தரித்துள்ளனர்.

தொடர்ந்து தண்ணிமுறிப்பு பூர்வீகத் தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள், தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் உள்ளடங்கலாக சுமார் 632ஏக்கர் காணிகளை விகாரைக்குரிய காணிகளாக அபகரித்துள்ளனர்.

இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்கு கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டு அதில் போலியான வராலாற்றுத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் ஜயந்த சமரவீர குருந்தூர்மலையை பௌத்த சின்னமாக அறிவுக்கும்படி கூறுகின்றார்.

இவ்வாறாக எமது தமிழர்களின் பூர்வீக வரலாற்று இடத்தை அத்து மீறி அபகரித்து வைத்துக்கொண்டு, தமிழர்களின் வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு அதற்கு மேல் பௌத்த வரலாறுகள் இங்கு புதிதாக எழுதப்படுகின்றன.

இதன்மூலம் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுகின்றது. தமிழர்களான எமக்கு இந்த நாட்டிலே வராறுகள் இல்லை, தமிழர்கள் இந்தநாட்டில் ஏதிலிகளாக வந்தவர்கள் என காட்டுவதற்கு சிங்களம் முயற்சிக்கன்றது.

இந்த நாட்டின் பூர்வீகக்குடிகளான எம்மால், சிங்களத்தின் இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்தது என பொய்களைக் கூறும் பௌத்த துறவிகள், சிங்கள கடும்போக்காளர்கள், சரத் வீரசேகர மற்றும், இந்த ஜயந்த சமரவீர போன்ற சிங்கள இனவாதிகளாலேயே இங்கு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குருந்தூர்மலையை பௌத்த சின்னமாக அறிவித்தால் இங்கு இனங்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இவ்வாறான தான்தோன்றித் தனமான செயற்பாடுகளால்தான் இந்த நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந் நிலையில் அந்த ஆயுதப்போராட்டத்தால் எமது தமிழ் மக்கள் பலஉயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு நலிவடைந்திருக்கின்ற எமது மக்கள் மீது இவ்வாறான அழுத்தங்க.ளை பிரையோகித்து அவர்களை மீண்டும் ஓர் ஆயுதக் கலாச்சாரத்திற்கு தள்ளுவதற்கு இந்த சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.

தெற்கில் இருக்கின்ற பெரும்பாண்மையின மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்த இனவாதிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 21.07.2023நேற்று துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்கள் குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜயந்த சமரவீர என்னும் இனவாதி பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நாம் கடந்த 20.07.2023குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதாக இருக்கவில்லை. இப்படியிருக்கும்போது தெற்கிலிருக்கின்ற பெரும்பாண்மை இனமக்களை வன்முறைக்குத் தூண்டும் விதமாக அவர் இவ்வாறு போலியான தகவல்களைத் தெரிவித்துவருகின்றார்.

குறிப்பாக சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர போன்றவர்கள் தெற்கில் தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்காக போலியானதும், இனவாதத்தைத் தூண்டும் விதமான கருத்துக்களத் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்ந்தும் அவர்கள் பாராளுமன்ற கதிரைகளில் அமரவேண்டுமெனில் இவ்வாறு இனவாதத்தை கக்கவேண்டிய தேவை அவர்களுக்கின்றது.

உண்மையில் இவர்கள் தமது அரசியல் இருப்பிற்காக எதையும் செய்யக்கூடிய அரசியல் மனநோயாளிகள் என்றே சொல்லவேண்டும்.

கனேடிய உயர்ஸ்தானிகளை வெளியேற்றச் சொல்வது, முல்லைத்தீவு தமிழ்நீதிபதியை விமர்சிப்பது, கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தவர்களை இந்த நாட்டிலிருந்து நீக்கச் சொல்வது உள்ளிட்ட விடயங்களைப் பார்க்கும்போது, சரத் வீரசேகரவை இந்த அரசியல் மனநோய் எவ்வளவு தூரம் ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

அதேபோலதான் இந்த ஜயந்த சமரவீரவும் நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி, தமிழர்களின் தொல்லியல் இடத்தை பௌத்த தொல்லியல் இடமாக அறிவுக்குமாறு கூறி, தெற்கிலுள்ள பெரும்பாண்மை இன மக்கள் மீது இனவாதத்தை விதைத்து, அப்பாவி சிங்களமக்களிடமிருந்து வாக்குகளை அறுவடைசெய்வதற்கு முயற்சிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் மனநோய் உள்ளவர்களை தெற்கிலுள்ள பெரும்பாண்மை மக்கள் இனங்கண்டு, இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவேண்டும்.

தமிழ் மக்களாகிய நாம் எமது பூர்வீக வாழ்விடங்களில், எமது பூர்வீக, பண்பாட்டு, வாழ்வில் அம்சங்களுடன் சிறப்பாக வாழ விரும்புகின்றோமே தவிர, இவ்வாறான இனவாதத்தையோ, பிரிவினையையோ, வன்முறையினையோ ஒருபோதும் விரும்பவில்லை – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments