சமூகவலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோகளை அதிகம் பேர் விரும்பி பார்ப்பார்கள். குறிப்பாக யானை, சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் காட்டு ராஜாவான சிங்கம் இலை, தழைகளை சாப்பிடுவது பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த வீடியோவை வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிங்கம் ஒன்று மரத்தில் உள்ள இலை, தழைகளை பொறுமையாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த காட்சிகளை பதிவிட்ட சுசாந்தா நந்தா தனது பதிவில், சிங்கத்தின் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது அது மூலிகைகளை தேடி சாப்பிடக்கூடும். தண்ணீர் சத்து குறைந்து தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் போதும் இவ்வாறு சாப்பிடக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ரீடுவிட்களையும், லைக்குகளையும் பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.