மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்துச்சென்ற வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மெய்டி சமூகத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியின் வீட்டை அவரது சமூகத்தை சேர்ந்த பெண்களே தீயிட்டு கொளுத்தினர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளின் மக்கள் தொகையில், 53 சதவீதம் மெய்டி சமூகத்தினர் வசிக்கின்றனர். அதே நேரத்தில் மலை மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையில், 40 சதவீதம் கூகி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்க்கின்றனர்.
இந்த நிலையில், தங்களுக்கு எஸ்.டி., எனப்படும் பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து கேட்டு, மெய்டி சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்றம், இவர்களது கோரிக்கை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கடந்த மே 3ம் திகதி, மலைவாழ் மக்கள் அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அப்போது மெய்டி – கூகி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது.
கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வரும் சூழலில், அங்கு இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. இந்த நிலையில், மணிப்பூரில், மெய்டி சமூகத்தினர் அடங்கிய கும்பல் ஒன்று, கூகி சமூகத்தை சேர்ந்த இரு பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்துச்சென்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் மே 4ம் திகதி நடந்ததாகவும், அது தற்போது தான் வெளியாகியுள்ளதாகவும், மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.