ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவ படையால் ஆக்ரமித்தது. இதற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
500 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறும் இந்த போர் இந்த ரஷிய- உக்ரைன் போர் தற்போது 513-வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த ரஷியாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகள் (cluster bombs) எனும் பெருஞ்சேதம் விளைவிக்கும் வெடிகுண்டுகளை வழங்கியது.
இந்நிலையில் கொத்து வெடிகுண்டுகளை சரியான முறையில் உக்ரைன் பிரயோகப்படுத்துவதாகவும், இது நல்ல பலனை தந்து வருவதாகவும், இதனால் ரஷியாவின் ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் முன்னேற முடிவதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். இந்த ரஷிய- உக்ரைன் போரில் கொத்து வெடிகுண்டுகளை வீசுவதாக பரஸ்பர குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் நாசத்தை உண்டாக்க கூடிய இந்த வெடிகுண்டுகளை ரஷிய ராணுவ வீரர்கள் குவிகின்ற இடங்களில் மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன் தெரிவித்திருந்தது. உலகில் 120 நாடுகளுக்கும் மேல் தடை செய்யப்பட்ட இந்த கொத்து வெடிகுண்டுகள், வெடிக்கும்போது சிறு சிறு குண்டுகளை ஒரு பெரிய பரப்பளவில் வீசி சேதத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில குண்டுகள் வெடிக்காமல் போகலாம். அவை பல தசாப்தங்களுக்கு அப்பகுதியில் ஆபத்தை உண்டாக்கும்.
மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் இரு நாடுகளும் அப்பாவி பொதுமக்களை அழிக்கும் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது. கிளஸ்டர் குண்டுகளின் (கொத்து வெடிகுண்டு) பயன்பாட்டில் எந்த சர்வதேச சட்டமீறலும் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துவது ஒரு சட்டமீறலாக மாறலாம். 120-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மாநாட்டில் கையொப்பமிட்டன. அந்த நாடுகள், “இந்த வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, வினியோகிக்கவோ, அல்லது எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கவோ மாட்டோம்” என உறுதியெடுத்தது. மேலும் தங்களின் இருப்பில் உள்ளவற்றை அழிக்கவும் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. கொத்துகுண்டு விவகாரத்தில் ”எங்களிடம் போதுமான கையிருப்பு உள்ளது. உக்ரைன் பயன்படுத்தினால், பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது” என ரஷியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.