தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை தொடங்குகிறார். 5 கட்டங்களாக 100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடைகிறது. 28-ந்தேதி தொடக்க நாள் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
நிறைவு நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்தே நடத்தப்படும் இந்த யாத்திரையை பிரசாரமாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். 9 ஆண்டுகளில் மோடி அரசு செய்த சாதனைகளையும் அதிலும் தமிழகத்துக்கு செய்துள்ள சாதனைகள் பற்றியும் பட்டியலிட்டு 10 லட்சம் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க தயார் நிலையில் வைத்துள்ளார்கள்.
இந்த யாத்திரையில் திறந்த வாகனத்தில் புகார் பெட்டி ஒன்றும் கொண்டு செல்லப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஸ்டாலின்தான் வராரு. விடியல் தரப் போறாரு என்ற முழக்கத்தை முன் வைத்திருந்தனர். தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த விடிவும் வரவில்லை என்பதை குறிப்பிடும் வகையில் “விடியல-முடியல” என்ற வாசகம் அந்த புகார் பெட்டியில் இடம் பெற்று இருக்கும்.
ஏற்கனவே “தி.மு.க. பைல்ஸ்” என்ற பெயரில் தி.மு.க. தலைவர்கள், அமைச்சர்கள் மீது புகார்களை வெளியிட்டு வரும் அண்ணாமலை கீழ் மட்டத்திலும் நில மோசடி, ஊழல், மணல் கடத்தல் போன்ற விவகாரங்களில் தி.மு.க.வினர் ஈடுபடுவது பற்றி பொதுமக்களிடமே புகார்களை பெற அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி இந்த புகார் பெட்டியில் புகார் மனுக்களை போடலாம். அந்த புகார் மனுக்களை தொகுதி வாரியாக பிரித்து அந்த தகவல் பற்றி ஆய்வு செய்வார்கள். ஆதாரங்களுடன் சேகரிக்கப்படும் முறைகேடுகளை ஒன்று சேர்த்து ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனியாக ‘பைல்கள்’ தயாரிக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க.வினர் சம்பந்தப்பட்ட முறைகேடுகளை மக்கள் மத்தியில் வெளியிடவும் அண்ணாமலை அதிரடியாக திட்டமிட்டுள்ளார். புகார் பெட்டியில் பொது மக்கள் துணிந்து புகார்களை சொல்லவும், புகார் அளிப்பவர்களின் பெயர் விவரங்களை ரகசியமாக வைத்தி ருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.