சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்று, ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து போரிட்ட உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் உதவி வருகின்றன. இந்த உதவிகளின் ஒரு பகுதியாக அவை ரஷியா மீது விரிவான பொருளாதார தடைகளை உருவாக்கி, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
500 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த 10 பேருக்கும், ரஷியாவின் 35 நிறுவனங்களுக்கும் ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ரஷியாவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறைகளில் உள்ள 35 நிறுவனங்கள் மீதும், ரஷியாவின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பெலாரஸின் மூத்த ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் மீதும் தடை ஆஸ்திரேலியா தடை விதிக்கிறது.
ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ரஷிய முதல் துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசோவ் மற்றும் துணை பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த சில மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தவிர, முக்கிய ரஷிய பாதுகாப்பு நிறுவனங்களும், அந்நாட்டின் மிக பெரிய ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் ஆகியோரும் இந்த தடைகள் பட்டியலில் அடங்குவர். இப்புதிய கட்டுப்பாடுகள், அணுசக்தி நிறுவனங்கள் மற்றும் ஆர்க்டிக் வளங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள ரஷிய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.