புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர்,
தெமட்டகொட மற்றும் ரத்மலானை புகையிரத நிலையங்கள், ரயில் பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டுச் சம்பங்கள் தொடர்ச்சியாக அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதனை புகையிர நிலையங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ பொலிஸாருக்கோ மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதால், விசேட அதிரடிப் படையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன.
புகையிர கடவைகளில் காணப்படும், சிறிய இரும்பு கூட திருடப்படுகிறது. இதனால், புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் காணப்படுகிறது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த விசேட செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. அதேநேரம், களனி பாலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கணக்கெடுப்பு சரியானதா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது.எங்கிருந்து இந்த புள்ளிவிபரங்களை எடுத்தார் என்பது எனக்குத் தெரியாது.
எமது அமைச்சு இதுதொடர்பாக கூறவில்லை. இந்த நிலையில், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை வைத்தே இவர் இந்த புள்ளிவிபரங்களை தயாரித்துள்ளார்.
எவ்வாறாயினும், களனி பால விவகாரம் தொடர்பாக விசாரணைகள் தற்போது இடம்பெற்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை பாதுகாக்க விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.
இதுதொடர்பான சரியான புள்ளிவிபரங்களை நான் விரைவிலேயே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கிறேன். என்றும் அவர் தெரிவித்திருந்தார்.