உலகின் மிக பெரிய பனிமலைகளில் ஒன்றாக சியாச்சின் பனிமலை உள்ளது. சர்ச்சைக்குரிய காஷ்மீரின் வடக்கு பகுதியில் 71 கி.மீ. நீளத்திற்கு இந்த பனிமலை அமைந்து உள்ளது
இந்த பகுதியில் நாட்டின் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பவர்களை விட, அதிக குளிர் மற்றும் பனிச்சரிவு ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். கடுமையான பருவநிலையால், ஒரு வீரரை 3 மாத கால அளவுக்கே ராணுவம் பணியில் ஈடுபடுத்த முடியும்.
கடந்த 37 ஆண்டுகளில், தீவிர பருவநிலை மற்றும் எதிரிகளின் துப்பாக்கி சூடு போன்றவற்றால், சியாச்சினில் இதுவரை 800 வீரர்கள் உயிர் தியாகம் செய்து உள்ளனர். இந்த நிலையில், சியாச்சின் பனிமலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.