Home Srilanka Politics 13 ஐ வலியுறுத்திய கடிதத்தால் இந்திய நிலைப்பாட்டில் பின்னடைவு! இம்முறை கடிதத்தில் கையெழுத்திடாமைக்கு அதுவே காரணம்!

13 ஐ வலியுறுத்திய கடிதத்தால் இந்திய நிலைப்பாட்டில் பின்னடைவு! இம்முறை கடிதத்தில் கையெழுத்திடாமைக்கு அதுவே காரணம்!

0

“13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஆண்டு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியமையைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இம்முறை 13ஐ வலியுறுத்தி அனுப்பப்படும் கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கையெழுத்திடவில்லை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கைப் பிரதிநித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மதியபோசனத்துடன் நேற்று திங்கட்கிழமை சுமார் 2 மணி நேரம் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போதே சுமந்திரன் எம்.பி. மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டார்.

சந்திப்பின் ஆரம்பத்தில் அமெரிக்கத் தூதுவர், “நாங்கள் வழமையாக தனித்தனியேதான் கட்சிகளைச் சந்திப்பது வழமை. ஆனால், ஜனாதிபதி ரணிலின் இந்தியப் பயணத்துக்கு முன்பதாக தமிழ்த் தரப்பிலிருந்து 3 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வேறுபாடுகளை நாம் விளங்கிக்கொள்வதற்காகத்தான் ஒன்றாக அழைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி., த.சித்தார்த்தன் எம்.பி. மற்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர், “13 ஆவது திருத்தம் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலைமைக்காவது கொண்டு செல்லப்படவேண்டும். 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்படும்போது அதில் பல விடயங்கள் இருந்தன. அவை இன்று பறிக்கப்பட்டு பலவீனமாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டனர்.

இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., “1987ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் உயர் நீதிமன்றத்தின் ஊடாக 30 வியாக்கியானங்கள் வரையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ளன. எனவே 1987ஆம் ஆண்டிலிருந்தவாறான 13ஆவது திருத்தச் சட்டம் மீளவும் கொண்டு வரப்படவேண்டும் என்பது நடைமுறைசாத்தியமற்றதும் – நீதிமன்ற அவமதிப்பாகவும் அமையும்” என்றார்.

“”13ஆவது திருத்தத்தைத் தாண்டிய எதற்கும் இந்தியா தயாரில்லை” என்று சித்தார்த்தன் எம்.பி. இதன்போது தெரிவித்தார்.

“இந்தியா தன்னுடைய தேவைக்காக 13ஆவது திருத்தத்தை தாண்டிய ஒன்றைப் பற்றிப் பேசாமல் இருக்கின்றது. அதற்காக ஒன்றுமில்லாத 13ஆவது திருத்தத்தை எப்படி நீங்கள் ஆதரிக்க முடியும்? 13 இல் ஒன்றுமில்லை என்பதைத்தானே தமிழ் மக்கள் சார்பில் நீங்கள் எடுத்துரைக்கவேண்டும்” என்று குறிப்பிட்ட கஜேந்திரகுமார் எம்.பி., “தேர்தல் காலங்களில் மக்கள் முன்பாக சமஷ்டியை வலியுறுத்தும் இவர்கள் பின்னர் 13ஆவது திருத்தம் என்று பேசுகின்றனர். இந்த மேசையில் இன்று பேசுவதை மக்கள் முன்வைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு இவர்கள் தயாராக இருக்கின்றார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டை சுமந்திரன் எம்.பி. விளக்கினார்.

“கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பின. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதில் கோரியிருந்தன. அந்தக் கடிதத்துக்குப் பின்னர் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு வலியுறுத்தி வந்த இந்தியா, அந்தக் கடிதத்தின் பின்னர் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் சுருக்கிக்கொண்டது. இது எமக்குப்  மிகப்பெரிய பின்னடைவாகும். இதன் காரணமாகவே இம்முறை 13ஆவது திருத்தத்தை மாத்திரம் வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கையெழுத்திடவில்லை. நாம் 13ஐ திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் கோரமாட்டோம். அதை நீக்குமாறும் கோரமாட்டோம்” – என்று குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version