பிரிட்டனில் பல வருடங்களாக சட்ட விரோதமாக புலம் பெயர்வோர் சிறு படகுகளில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு கடற்கரைகளில் வந்திறங்குகின்றனர். இவ்வாறு புகலிடம் தேடி வருபவர்களால் அந்நாட்டில் பல சிக்கல்கள் உருவாவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கான மசோதா சட்டமாவதற்கான கடைசி தடையும் நீங்கியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் “படகுகளை நிறுத்துவோம்” என்று அறிவித்து பெருமுயற்சி செய்து உருவாக்கிய இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேல்சபை “சட்டவிரோத குடியேற்ற மசோதா” இனி சட்டமாவதற்கு இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது.
சில உறுப்பினர்கள் அடிமைப்பாதுகாப்பு தொடர்பான திருத்தங்களையும், குழந்தை புலம்பெயர்ந்தோரை எவ்வளவு காலம் தடுத்து வைக்கலாம் என்பதற்கான வரம்புகளை குறிப்பிட வேண்டும் என முன்மொழிந்தனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பில் தோற்கடிக்கப்பட்டனர்.
இந்த மசோதாவின்படி படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும். இந்த மசோதா மன்னரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக உள்ளது. இவ்வாறு சட்ட விரோதமாக வருபவர்கள் ருவாண்டா போன்ற நாடுகளுக்கு மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டில் 45,000க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோர், தென்கிழக்கு பிரிட்டனின் கரைகளில் சிறிய படகுகளில் வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் புலம் பெயர்வோர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது 2018ஐ விட 60% அதிகரித்திருக்கிறது.