யாழ். நாவாந்துறைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று மாலை ஏற்பட்ட மோதல் காரணமாக பல வீடுகளும் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 மணித்தியாலங்கள் நீடித்த மோதல் விசேட அதிரடிப் படையினரின் களமிறக்கத்துடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
நாவாந்துறை வடக்கு மற்றும் தெற்கு கிராமங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் உருவான முறுகலின் தொடர்ச்சியாகவே நேற்று மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இரு கிராமங்களையும் சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்குள்ள பிரதான வீதிகளில் போத்தல் துண்டுகளால் நிறைந்திருந்தது. மோதல் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
பொலிஸாரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படாததையடுத்து பிரதேச செயலர் சா.சுதர்சனின் கோரிக்கைக்கு அமைவாக விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டனர். 3 மணித்தியாலங்களில் மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு வரையில் பதற்றம் நிலவியது.