கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் மனிதநேயம் மிக்கவர் என எல்லோரும் போற்றும் பண்பாளராக விளங்கிய கவிஞர் வாலி அவர்களின் நினைவு தினம் இன்று.
1931ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருப்பராய்துறையில் பிறந்து திருவரங்கத்தில் வளர்ந்தவர். சிறுவயதில் ஓவியர் மாலி போல புகழ் பெற வேண்டும் என்று தனது பெயரை வாலி என்று மாற்றிக்கொண்டார்.
கவிஞர் வாலி அவர்களின் திறமையை கண்டறிந்து திரையுலகிற்கு கொண்டுவந்தார் பாடகர் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். கவிஞர் எழுதிய “ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” என்ற பாடலே அவரை திரையுலகிற்கு அடியெடுக்க காரணமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதோடுமட்டுமின்றி “பொய்க்கால் குதிரை”, “ஹே ராம்” போன்ற படங்களில் நடித்ததன் முலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கவிஞர் வாலி எழுதிய அவதார புருஷன், பாண்டவர் பூமி என்ற நூல்கள் சங்க இதிகாசங்களையும், இயற்கை அமைப்புகளையும் வர்ணித்து அவரின் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் இருந்த பற்றை வெளிப்படுத்தியிருப்பார்.
கவிஞர் வாலி அவர்களின் திறமையை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், தமிழக அரசின் சார்பாக சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
திரையுலக ஜாம்பவானாக திகழ்ந்த கவிஞர் வாலி அவர்கள், இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து இன்றுடன் பத்து வருடங்கள் ஆனாலும், அவரது பாடல்களை நம் உணர்வுகளிலிருந்து பிரிக்க முடியாது.