Home Srilanka சிங்களவர்களுக்கு உண்மையைச் சொல்லாமல் பேச்சுக்களில் பங்கேற்பதில் அர்த்தமில்லை!

சிங்களவர்களுக்கு உண்மையைச் சொல்லாமல் பேச்சுக்களில் பங்கேற்பதில் அர்த்தமில்லை!

0

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுடன் நடத்தும் பேச்சுக்களின் வரையறை என்ன என்பதை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மையைச் சொல்லாமல் – சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் பேச்சுக்களில் தமிழர் தரப்பு பங்கேற்று எமக்கான வாய்ப்புக்களை பாழாக்கக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கத் தூதுவருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மதியம் அமெரிக்கத்தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் எவ்வளவு தூரம் கரிசனை செலுத்துகின்றார் என்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் கருத்தை அறிய விரும்புவதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இருவரும், “ரணிலால் எதுவும் செய்ய முடியாது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே செயற்படுகின்றார்” – என்று குறிப்பிட்டனர்.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை நோக்கி, “நீங்கள் இவர்களுடன் (செல்வம், சித்தார்த்தன்) இணைந்துதான் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளீர்கள். 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது மாத்திரமல்ல இடைக்கால நிர்வாக சபை யோசனையையும் ஜனாதிபதி ரணிலிடம் கொடுத்துள்ளீர்கள். அவரால் எதுவும் செய்ய முடியாது என்று இவர்கள் இங்கே கூறுகின்றனர். அப்படியென்றால் ஏன் அதனை ரணிலிடம் கொடுத்தீர்கள்? ரணில் நேர்மையாக தமிழ் மக்களின் விடயங்களைக் கையாள்கின்றார் என்று சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு முயல்கின்றீர்களா?” என்று  கேள்வி எழுப்பினார்.

“அதற்காக நாம் சும்மா இருக்க முடியாதே. முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்று விக்னேஸ்வரன் பதிலளித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலவீனமாக இருக்கின்றார். அவர் நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதாகக் காட்டியே தேர்தலை எதிர்கொள்ளப்போகின்றார். பொருளாதார ரீதியாக நாடு பலமடையவேண்டும் என்றால் சர்வதேச உதவிகள் அவசியம். ரணில் – ராஜபக்சக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்த வேண்டும்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீராமல் சர்வதேச சமூகம் உதவிகளைச் செய்யாது. இனப்பிரச்சினை தீர வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் நிராகரிக்கும் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வை முன்வைக்க முடியாது. சர்வதேச சமூகம் உதவிகளைச் செய்யாவிட்டால் நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த முடியாது. இந்த உண்மையைச் சிங்கள மக்களுக்கு ஜனாதிபதி ரணில் சொல்ல வேண்டும். பேச்சுக்கு நேர்மையாக நடக்க வேண்டுமெனில் இதைச் சொல்ல வேண்டும்.

இவை எதுவும் இல்லாமல் பேச்சு எப்படி நடக்கப் போகின்றது என்ற எந்தவொரு வரையறையும் இல்லாமல் அதில் கலந்துகொள்வதில் அர்த்தமில்லை.

இந்த நிலைப்பாட்டை இந்த மேசையிலுள்ள அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றிணைந்து எடுத்து ரணிலின் பேச்சுக்கு செல்லாமல் விட்டிருந்தால் சர்வதேச சமூகமும் இலங்கைக்கான உதவிகளை மறுபரிசீலனை செய்திருக்கும்.

நாட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று சர்வதேச சமூகம் உணர்ந்தால் உதவிகளை வழங்காது. இலங்கை உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் சொல்லைக்கேட்டிருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” – என்று சுட்டிக்காட்டினார்.

“ரணில் விக்கிரமசிங்கதான் ஜனாதிபதி. அவருடன்தான் விடயங்களைக் கையாள வேண்டும் என்பதையும் மனதில் வைத்திருங்கள்” என்று அமெரிக்கத் தூதுவர் பதிலளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version