சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.81 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. மேலும், ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (2002) தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது, பல்வேறு ஆவணங்கள், ரூ.81 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
13 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனைக்கு பிறகு, இரவு 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரது காரில் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவை தாண்டி விசாரணை நீடித்தது. அப்போது, மகன் அசோக் உடன் இருந்தார். இந்த விசாரணை இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவு பெற்றது. இதன்பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி மீண்டும் விசாரணைக்காக அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார்.