கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று(17) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் சிறப்புற இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அதிதிகளால் மங்கள விளக்கு ஏற்றப்பட்டதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தொடர்ந்து “மாண்புறு மாணவ சமூகம்” எனும் கருப்பொருளில் ஆளுமை மிக்க மாணவ சமூகத்தினை உருவாக்கும் நடப்பாண்டுக்கான திறன்விருத்தி போட்டியில் மத்திய பிரிவில் முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட கிளி. பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவன் ஜெ.கவிநயன் மற்றும் மேற்பிரிவில் முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி சு.யதுசனா அவர்களின் உரை இடம்பெற்றது.
மேலும் மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் அவர்களின் கவிதை, வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.கிருபாகரனின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றிருந்தது.
இறுதியாக ஆடிப்பிறப்பு பாடலினைத் தொடர்ந்து பரிசில் வழங்கல் நிகழ்வுடன் ஆடிக்கூழ் பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
ஆடிப்பிறப்பு பண்டிகையை தமிழர்கள் தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.