அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் கொரிய தீப கற்பகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இன்று கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியது.
தென் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான சர்வதேச கடற்பரப்பில் இந்த முத்தரப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. 3 நாடுகளை சேர்ந்த ஏஜிஸ் ரேடார் அமைப்புகளுடன் கூடிய ஏவுகணை அழிப்பான்களை சோதனை செய்தனர். சமீபத்தில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை நடத்திய பிறகு 3 நாடுகளும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக தென்கொரியா கடற்படை அதிகாரி ஒருவர் கூறும்போது, வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எங்கள் ராணுவத்தின் வலுவான பதில் அமைப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்புடன் திறம்பட பதிலளிப்போம் என்றார்.