பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டயமர் மாவட்டத்தில் உள்ள தளிச்சி பகுதிக்கு அருகே காரகோரம் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் கண்டறிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.