உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரானது கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டை கடந்து உள்ளது. எனினும், தொடர்ந்து போர் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கருங்கடல் பகுதியில் செவாஸ்தோபோல் துறைமுகத்தின் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல் தடுக்கப்பட்டு உள்ளது. வான்வழி மற்றும் நீருக்கடியில் என எண்ணற்ற ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்து உள்ளது.
இதுபற்றி ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைன் அரசு இன்று காலை கிரிமீய தீபகற்ப பகுதியருகே வான்வழியே 7 ஆளில்லா விமானங்கள் மற்றும் நீருக்கடியில் 2 ஆளில்லா விமானங்களை கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இவற்றில் 2 ஆளில்லா விமானங்கள், கடலோர பகுதியில் இருந்து சற்று தொலைவில் கருங்கடல் மீது சுட்டு வீழ்த்தப்பட்டன. 5 ஆளில்லா விமானங்கள் ரஷியாவின் மின்னணு போர் படைகளை கொண்டு இடைமறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன.
2 ஆளில்லா விமானங்கள் கருங்கடலின் வடபகுதியில் கண்டறியப்பட்டு, நெருப்பு கொண்டு அழிக்கப்பட்டன என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. எனினும் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.