Friday, December 27, 2024
HomeIndiaஅரசியலுக்கு வந்தால் நடிகர் விஜய் உடன் கூட்டணியா?

அரசியலுக்கு வந்தால் நடிகர் விஜய் உடன் கூட்டணியா?

சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்கள் இலக்கு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான். அப்போது கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி செயல்படுவோம்.

இன்னும் கூட்டணி தொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் கட்சி வலுவாகத்தான் இருக்கிறது. மக்கள் மாறவேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறோம். மக்கள் அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகம் தழைக்கவேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது. பணமில்லாத அரசியலை உருவாக்க வேண்டும். மக்கள் எங்கள் பக்கம் திரும்பி பார்க்கும் காலம் வரும் என்று நம்பிக்கையோடு பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சரத்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காமராஜரை பின்பற்றிதான் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகிறார்களே…

பதில்:- ஒருவர் விட்டுச்சென்ற பணியை தொடர்கிறார் என்றால், பெருந்தலைவர் காமராஜருக்குதான் அந்த புகழ் சேரும். பொற்கால ஆட்சி தந்த காமராஜரை முன்னோடியாக வைத்து ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அது வரவேற்கத்தக்கது. அதில் தவறில்லை.

கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- நடிகர் விஜய் மட்டும் அல்ல மற்ற நடிகர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். குறிப்பிட்ட ஒருவர்தான் அரசியலுக்கு வரவேண்டும், வரவேண்டாம் என சொல்ல நான் தயாராக இல்லை.

கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரோடு கூட்டணி வைப்பீர்களா?

பதில்:- நாங்கள் தனித்துதான் போட்டியிடப்போகிறோம். யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுக்காக சேவை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். நல்லவர்கள், வல்லவர்கள், அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்கள் ஆட்சி புரியவேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments